பிரகாஷ் ராஜின் குற்றச்சாட்டு!
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் "போலிச் செய்திகளால் ஏற்படும் தாக்கமும் சவால்களும்' என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், சிலை அரசியல் பற்றி பேசியபின், செய்தியாளர்களைச் சந்தித்தார். ""பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாலரை ஆண்டுகளில் போலியான செய்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது. இன்றைய செய்தித்துறை அனைத்துமே அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. இதன்மூலம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்ற முயற்சித்து வருகின்றனர். உள்நோக்கத்துடன் ஒருவர்மீதோ அல்லது அமைப்புமீதோ செய்தி பரப்பப்படுகிறது. இந்தப் போக்கினைத் தடுக்கவேண்டும்'' என்றார்.
இயக்குநரின் புதுக்கட்சி!
"ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை வென்றெடுத்த இளைஞர்கள் அரசியலையும் வென்றெடுப்பார்கள்' என்ற நம்பிக்கையில் புதிய அரசியல் அமைப்பைத் தொடங்குவதாக’’ இயக்குநர் கௌதமன் கடந்த 11-ந்தேதி ஊடகவியலாளர் சந்திப்பின்போது பேசினார். "தைத்திருநாள் முடிந்து நடைபெறும் மாநில மாநாட்டில் கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுகம் செய்யப்படும்' என அறிவித்த அவர், “"தமிழரை பிறர் ஆண்டது போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்' எனவும் தெரிவித்தார். ""ரஜினியையும் கமலையும் மதித்தபோதும், அரசியல் களத்தில் அவர்களை எதிர்ப்போம். ரஜினி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராகப் போட்டியிடுவேன்'' என்றார்.
நம்மவரின் பயணம்!
கமல் தனது அரசியல் பயணத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ரவுண்டுக்குப் பிறகு அடுத்தகட்டமாக, தமிழக மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள, 2019, பிப்ரவரி 21 முதல் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார். அன்றைய தினம் மானாமதுரையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார். தனது அரசியல் கொடியை முதன்முதலாக ஏற்றிவைப்பதுடன், கட்சிப் பெயரையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளார். கட்சித் தொடக்கம் எனும் திருப்புமுனை நிகழ்வையொட்டி, அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களின் ஆலோசனைகளையும் அவர் கேட்டுவருகிறார். இதற்காக அவர் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன், எம்.ஜி.ஆரின் தனிச்செயலாளராக இருந்த டி.என். செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோரையும் சந்தித்தார்.
-க.சுப்பிரமணியன்